×

நேரில் சந்திக்காமல் 3 ஆண்டு இன்ஸ்டா காதல் கட்டுனா அவனதான் கட்டுவேன்… மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காதலனை கரம் பிடித்த மாணவி

பொள்ளாச்சி: விபத்தில் கால் முறிந்து சிகிச்சைபெற்று வந்த இன்ஸ்டாகிராம் காதலனை அரசு மருத்துவமனையில் வைத்து கல்லூரி மாணவி திருமணம் செய்துகொண்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் சி.காலனியை சேர்ந்தவர் கமல்நாத் (20). ஆட்டோ டிரைவரான இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யதர்ஷினி (19) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 3 ஆண்டுகளாக நேரில் பார்க்காமல் இவர்கள் இருவரும் உயிருக்குயிராக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி நடந்த பைக் விபத்தில் கமல்நாத் படுகாயம் அடைந்தார். இதனால் அவருக்கு ஏற்பட்ட கால்முறிவுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காதலன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதை அறிந்த திவ்யதர்ஷினி, கடந்த 25ம் தேதி வேலூரிலிருந்து பொள்ளாச்சிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்த அரசு மருத்துவமனையில் உள்ள ஆண்கள் வார்டில் கமல்நாத் இருப்பதையறிந்து, அங்கு விரைந்து சென்றார் திவ்யதர்ஷினி. 3 ஆண்டுகள் நேரில் பார்க்காமல் காதலித்து வந்த காதலனை கண்டதும் இருவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

பின்னர் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். சிறிது நேரத்தில் காதலர்கள் இருவரும் மருத்துவமனை வார்டிலேயே திடீர் திருமணம் செய்து கொண்டனர். இதை வார்டில் இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த திவ்யதர்ஷினியின் பெற்றோர், நேற்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க பொள்ளாச்சிக்கு வந்தனர். ஆனால் திவ்யதர்சிஷினியோ, திருமணம் செய்து கொண்ட கணவனின் குடும்பத்தினருடந்தான் செல்வேன் என உறுதியாக இருந்தார். இருப்பினும், இரு தரப்பினருடன் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு சமாதானம் செய்து கணவருடன் மானவியை அனுப்பி வைத்தனர்.

The post நேரில் சந்திக்காமல் 3 ஆண்டு இன்ஸ்டா காதல் கட்டுனா அவனதான் கட்டுவேன்… மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காதலனை கரம் பிடித்த மாணவி appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Instagram ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார...